மக்களின் நம்பிக்கை மற்றும் மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் எனவும் அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது, நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி நல்லிணக்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதே என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் சிறைக்கு சென்றதாகவும் உயிர் தியாகம் செய்ததாகவும் கண்ணீரினாலும் வியர்வையினாலும் யுத்தம் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

நாங்கள் தனிநபர்களாக இதற்கு தெரிவு செய்யப்படவில்லை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எமக்கு வழங்கப்பட்ட வரமே இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கிடைத்த வரத்தை பாதுகாப்பதற்காக 19 அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த வரத்தை மீறியதாகவும் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வருவது சட்ட விரோதமானது எனவும் அதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க போவதில்லை எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.