முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் நேற்று செவ்வாய்கிழமை கூறியுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடவடிக்கை 19வது திருத்த சட்டத்தை நேரடியாக மீறுவதாகவும், சர்வதேச சமூகம் இலங்கையின் முறையான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே அடையாளப்படுத்த வேண்டும் என்றும் ஹியுகோ ஸ்வயர் கூறியுள்ளார்.இதனை பாராளுமன்ற வாக்குகளால் மாத்திரமே மாற்ற முடியும் என்றும், பாராளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட், இலங்கை ஜனாதிபதியுடன் பேசும் போது இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதாக கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக அவரது உறுப்பினர்கள் செயற்படுவதாகவும், இந்த சூழ்நிலையை நாம் மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்றும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் கூறியுள்ளார்.