சகோதரியின் கணவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவருவரையும் சாகும் வரையில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சகோதரியின் கணவரை படுகொலை செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இருவருக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். இஸ்ஸடீன் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு 10 மாதம் 09 ஆம் திகதி களுவாஞ்சிகுடியில் உள்ள ஒரு வீட்டில் மயில்வாகனம் வடிவேல் எனும் நபர் கடுமையான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர்களான தெய்வநாயகம் மகேஸ்வரன், தெய்வநாயகம் மேகராசா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இருவரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும், எனவே அவர்கள் இருவரையும் சாகும் வரையில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.