நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்புக்குள் செயற்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹானா சிங்கர் அம்மையாரின் கவனத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கவனத்துக்கு கொண்டுவந்தாரென, ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைத் தெளிவுப்படுத்தினார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் சபை, தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளை, ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஹானா சிங்கர் அம்மையார், ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளதெனத் தெரிவித்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.