ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மக்கள் சந்திப்பு இன்றுமுற்பகல் 11மணியளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள ஆதி மண்டபத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தெளிவுபடுத்திய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஒரு அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமும் கூட. அந்த செயற்பாட்டுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றபோது நாங்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்படியான ஒரு நிலைக்கு நாங்கள் போகவேண்டி ஏற்பட்டது ஏனெனில், அண்மையில் மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சந்தித்தபோது, சில நிபந்தனைகளை முன்வைத்தார். முக்கியமாக அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர வேண்டும், அதாவது, ஆகக்குறைந்தது 2000ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகாவால் முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான வரைவை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணாமற்போனோர் விடயம் என்பவற்றுக்கான உத்தரவாதங்கள் எழுத்துமூலமாக வழங்கப்பட வேண்டும். ஏனெனில் தங்களுடைழய கடந்தகால செயற்பாடுகள் எங்களை நம்பவைக்கவில்லை. இதனடிப்படையில் தான் நாங்கள் எழுத்துமூலம் கோருகிறோம் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலுரைத்த மகிந்த ராஜபக்ச, தான் இப்போது வந்திருப்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அல்ல என்றும், அடுத்த தேர்தலுக்குப் பின்பு இவ்விடயங்கள் பற்றி சிந்திப்போம் என்றும் கூறியிருந்தார்.

அதேநேரத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த அரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்நடவடிக்கையில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் ஒரு தேக்கநிலையை உருவாக்கி இருந்தாலும் அதை தொடர்ந்து அவர் முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சட்டத்திற்கு விரோதமான ஒரு விடயம் என்ற ரீதியில் நாங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளோம்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் எமது கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்சவுடன் சென்று சேர்ந்தது கட்சிக்கோ தலைமைக்கோ தெரியாமல் நடந்த விடயமாகும். அவர் கனடாவில் இருந்தபோது பல தடவைகள் தொடர்புகொண்டு கதைத்தபோதும் அப்படியொரு நிலைப்பாட்டினை எடுப்பார் என்பதை நம்பவில்லை. அவர் இத்தகைய முடிவை எடுத்த காரணத்தினால் அவரைக் கட்சியில் இருந்து விலத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும், தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் மகிந்த ராஜபக்சவுடைய கடந்தகால நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது அவரை நம்புவது கடினம் என்ற ஒரு அபிப்பிராயத்தையே கூறினார்கள் அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்கக்கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த த.சித்தார்த்தன் அவர்கள், வெறுமனே இவர்கள் தங்களுடைய அதிகாரப் போட்டிக்காக நடாத்துகின்ற அரசியல் சதுரங்கப் போட்டியில் இருவரில் எவரை ஆதரிப்பது என்ற காரணத்திற்காக எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடையாது. அதிலும் எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில் இந்த சந்தர்ப்பத்தில் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளுமாக சேர்ந்து எடுக்கின்ற முடிவையே ஆதரித்து நிற்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து கூட்டம் நிறைவுபெற்றது.