ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் 1.30மணியளவில் வவுனியாவில் கூடியது.

இதன்போது அரசியலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினால் உருவான பிரச்சினைகள், பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் கட்சியிலிருந்து சென்று மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டமை, கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் தெளிவுபடுத்திய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஒரு அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும். திடீரென ஏற்பட்ட இந்த அரசியல் மாற்றம் இலங்கையில் பிரத்தியேகமாக தமிழ் மக்கள் மத்தியில் பாhரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்க்கிடையில் இருக்கின்ற பிரச்சினையில் அவர்களில் யாருடைய பக்கம் நிற்பது என்ற காரணத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக உடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளுமாக சேர்ந்து ஒரு முடிவினை எடுத்துள்ளோம். அதாவது மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது நாங்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் விடயத்தில் அவர் கனடாவிலிருந்து இலங்கை வந்தபின் அவருடன் தொடர்பு இருக்கவில்லை. அவர் எமது கட்சியை விட்டு மகிந்தாவின் கட்சிக்கு செல்வார் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவருடைய செயற்பாடு எங்களுக்கொரு பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியதையடுத்து அவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு கூட்டத்தின் இறுதியில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளுமாக சேர்ந்து எடுத்த முடிவை ஆதரித்து நிற்பது

2. பா.உ வியாளேந்திரனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலத்துவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு அறிவித்து இது தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொள்வது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உப தலைவர் வெற்றிடத்திற்கு கட்சியின் செயற்குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான மயில்வாகனம் நிஸ்கானந்தராஜா தெரிவுசெய்யப்பட்டார்.