முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் வெளிநாட்டு பயணக் கடவுச்சீட்டை அவரிடம் வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெதமுல்லையிலுள்ள டீ.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணத்திற்காக,

இலங்கை காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மூன்று கோடியே 39 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்றைய விசாரணைகளின் பின் எதிர்வரும் 27ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.