மட்டக்களப்பு மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுடைய கண்காணிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் வெள்ள நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றுகாலை வரையில் மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு பிரதேச செயலர்களுடைய கண்காணிப்பில் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 4 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் தனை குழுவினரால் சமைத்த உணவு பரிமாறப்படுவதுடன், முகாம்களுக்குரிய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், மாவட்டத்தின் 9 வீதிகளில் 2 அடிக்கு மேல் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.

பிள்ளையாரடி – தன்னாமுனை வீதி, வவுணதீவு – வலையறவு பாலம் ஆகியவற்றினால் நீர் பாய்ந்தோடுவதனால் போக்குவரத்துச் நோக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்க அதிபரின் பணிப்பிற்கமைய மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது. அதன் ஊடாக தொடர்ச்சியாக வெள்ள நீர் வெளியேறிக் கொண்டிருப்பதனால் சுமுகமான நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

இருந்த போதும் மீண்டும் மதியத்துக்குப் பின்னர் மழை பெய்துகொண்டிருப்பதனால் அனைத்து பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அவசர செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன், அனர்த்து முகாமைத்துவ பிரிவு 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.