மன்னார் தோட்டவெளி ஜோசப் வாஸ் நகர் கிராம பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மூழ்கி அக்கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான சிறுவர்கள் இருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த இரு சிறுவர்களும் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 7வயதுடைய கனகராஜ் ரஜீத் மற்றும் 7 வயதுடைய இந்தயூட் லிவிசன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இரு சிறுவர்களும் நேற்றுமாலை தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சிறுவர்கள் உயிரிழந்து சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு குளிக்கச் சென்ற மேலும் சில சிறுவர்கள் உறவினர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தோட்டவெளி மக்கள் இரு சிறுவர்களின் சடலங்களை மீட்டதோடு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் வவுனியாவில் இருந்து வருகை தந்த விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட தோடு மீட்கப்பட்ட குறித்த இரு சிறுவர்களின் சடலங்களையும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.