பாராளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானியூடாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அரசியலமைப்பின் 33 ஆவது அதிகாரத்தின் இரண்டாம் பிரிவின் ஏ உப பிரிவு, 62 ஆவது அத்தியாயத்தின் இரண்டாம் உப பிரிவு, 70 ஆவது அத்தியாயத்தின் ஐந்தாவது உப பிரிவு ஆகியவற்றின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்றத் தேர்தல் 2019ம் ஆண்டு ஜனவரி 05ம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ம் திகதிமுதல் 26ம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய பாராளுமன்றம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.

அரச அச்சகத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் பின்னரே ஜனாதிபதி இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை இன்று சந்தித்த பின்னர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இதன்போது, எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கும் தாம் தயாராகவுள்ளமையால், தேவையான செயற்பாடுகளை தேவையான வகையில் எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.