பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி நிலைமைகளை ஆராய்ந்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து பெரும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அரசியல் அமைப்பினை மீறிய தீர்மானங்களை கண்டித்தும் சட்ட விரோதமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கும் நடவடிக்கை எடுத்தமை மற்றும் பாராளுமன்றத்தை கலைத்தமையை எதிர்த்தும் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியும் பாராளுமன்ற கலைப்பை கண்டித்து உயர் நீதிமன்றம் செல்லவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தாம் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையும் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டமையும் ஜனநாயக விரோதமானது என சுட்டிகாட்டும் மக்கள் விடுதலை முன்னணி, இந்த பாராளுமன்றம் அரசியல் அமைப்பிற்கு அமைய கலைக்கப்படாது தேர்தல் ஒன்றினை நடத்த இடமளிக்க முடியாது என கூறியுள்ளனர்.

ஆகவே அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய மக்கள் விடுதலை முன்னணியும் இன்றைய தினம் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தது.

பாரளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியின் நகர்வுகள் ஜனநாயகத்தை முழுமையாக அழிக்கும் ஒன்றென கூறியதுடன் தேர்தல் அறிவிப்பு விதிமுறைக்கு அமைவானது அல்ல எனவும் எதிர்க்கட்சியின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் இதனை உறுதிப்படுத்தினார். அதேபோல் நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் நான்கரை வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பது, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது” என்றும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எனவே இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்திலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவே நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று அவர் கூறினார்.

அத்துடன் நாங்கள் நீதிமன்றம் செல்வது மட்டுமின்றி இவ்வாறான தொடர்ச்சியான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.