கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக மின்சார சபை ,மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மின்சார சபையினர் அப் பகுதிக்கான மின்சார இணைப்பினை துண்டித்ததன் பின்னர் அங்கு கூடிய இளைஞர்கள் என பலரும் தீயை பகுதி அளவில் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்ததன் பின்னர் கரைச்சிப் பிரதேச சபை நீர்த்தாங்கிகள் மூலம் குறித்த கடைத் தொகுதியின் மேல் மாடியில் பிடித்திருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு நவீன தீயணைப்பு இயந்திரம் அடங்கலாக தீயணைப்பு பிரிவு கையளிக்கப் பட்டிருந்தது குறித்த தீயணைப்பு இயந்திரம் இயங்கு நிலைக்கு வராமையால் குறித்த பல லட்சம் இழப்பு இடம்பெற்றுள்ளது.

பல போராட்டங்களின் மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெறப்பட்ட இவ் தீயணைப்பு படை இருந்த போதும் இவற்றை தயார் நிலையில் வைத்திருக்காமல் இவ் இழப்பு இடம்பெற்றது என்றும் கரைச்சி பிரதேச சபையின் அசமந்தப் போக்கு எனவும் அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.