நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பம் இடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நிதியரசர் நலின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான பிரசன்ன ஜனவர்தன மற்றும் ப்ரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இடைக்காலத் தடையுத்தரவு இன்றுமாலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதிவரை செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் 13 மனுக்கள் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, குறித்த மனுக்களின் பரிசீலனை நேற்று தொடக்கம் உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மேலும், இன்றையதினம் குறித்த மனுக்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் 5 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. குறித்த இடையீட்டு மனுக்களும் இன்றைய தினம் உயர்நீதிமன்றில் பரசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. உயர்நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இந்நிலையில், சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை இன்று உயர்நீதிமன்றில் தெரிவித்திருந்தார். அதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரத்தின்படி நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்களை ரத்துச் செய்யுமாறும் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் குறித்த மனுக்களின் பரிசீலனை நிறைவு செய்யப்பட்டதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்த நிலையில், மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது