புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதாகவும், இன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக கிடைத்த பெரும்பான்மை வாக்குகளுக்கமைய பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனமானது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால், ஒக்டோபர் 26ம் திகதி நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் இந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். இதன்படி தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனக் கூறிய சபாநாயகர் கரு ஜயசூரிய, நாளை காலை 10 மணிவரை, பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார்.