பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் இன்றுபகல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் 19ம் திகதிக்கு, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார். 

இதன்படி பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார். பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் அழைத்து வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்தார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலில், முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நீரில் மிளகாய் தூள் கலந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

இது இவ்விதமிருக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வந்திருந்த பொலிஸார் மீதும் ஆளும் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். குழப்பத்தின் மத்தியில் படைக்கள சேவிதர் செங்கோலுடன் வருகைதந்ததுடன், அவர்களின் பின்னால் சபாநாயகர் சபைக்கு வந்தார். இதன்போது ஆளும் தரப்பினர் கையில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் எடுத்து தாக்குதல் நடத்தினர். சபாநாயகரை பாதுகாக்க முற்பட்ட பொலிஸாரை, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கியுள்ளனர்.

அத்துடன் பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

குறிப்பாக இன்றைய தினம் இடம்பெற்ற குழப்ப நிலையைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை முன்னோக்கிச் செல்வது கடினமாக சூழல். இதேவேளை, இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது.

அத்துடன் பாராளுமன்றில் பெரும்பான்மை யார் பக்கம் உள்ளது என்பது தற்போது புலனாவதாகவும், கட்சித் தலைவர்களை இன்றைய தினம் மாலை ஜனாதிபதி சந்திப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.