ஜனாதிபதிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற நடைமுறைக்கு அமைய முறையாக சமர்ப்பிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இதன்போது அறிவித்துள்ளன. உரிய நடைமுறைக்கு அமைவாகவே ஏற்கனவே இரு தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. இதற்கமைய, பாராளுமன்றத்தில் இரு தடவைகள் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளும் செல்லுபடியாகும் என ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் 113க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பெரும்பான்மை தமக்குள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் நாளை முற்பகல் 10 மணிக்கு 113 பேரின் சத்தியக் கடாதாசிகளுடன் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மூன்றாவது தடவையாகும் நாளை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.