மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு நேற்று திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உரிய முறையில் கடமையை செய்யவில்லை என்ற காரணத்தினாலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னார் முருங்கன் பிரதான வீதி அடைக்கலமோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள புலவுக்காணியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி கட்டுக்கரை குள முகாமைத்துவக்குழு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கட்டுக்கரைகுள முகாமைத்துவக் குழுவின் கோரிக்கைக்கு அமைவாக உடனடியாக அடைக்கல மோட்டை வாய்க்காலுக்கு பொறுப்பான பொறியியல் உதவியாளர் ஒருவரும் விவசாய அமைப்பின் தலைவரும் நிலமையை நேரில் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக அரசாங்கத்தின் புலவுக் காணியில் விவசாயி ஒருவர் உழுது கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு நிலமையை பார்வையிடச் சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். குறித்த புகைப்படங்களை அழிக்குமாறு உழுது கொண்டிருந்த விவசாயி தெரிவித்ததோடு, அங்கு சென்ற இருவரையும் கைகளாலும் மண்வெட்டியாலும் தாக்கியமையால் காயமுற்ற இவர்கள் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சார்பாக உடனடியாக உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவக் குழு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை சந்தித்து குறித்த பிரச்சினை தொடர்பில் தெரியப்படுத்தியதோடு, தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த புதன் கிழமை இரவு மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 13 பொலிஸார் உயிலங்குளம் பகுதியில் உள்ள தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபரும், வீட்டில் இருந்தவர்களும் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த பொலிஸார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, கொண்டு சென்ற கைத்துப்பாக்கி ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபரை கைது செய்யச் சென்ற மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் குறித்த 13 பொலிஸாரும், தமது கடமையை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.