முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் தலையீடுகள்; இடம்பெறுவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத் திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்த நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளமை குறித்தே மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர் தயாகி ருவன் பத்திர இதனை தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் காணாமல்போதல்கள் உட்பட முக்கிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளில் தலையீடுகள் இடம்பெறுவதாக தோற்றம் ஏற்பட்டுள்ளமை குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதும் இடம்பெறும் விசாரணைகளில் எந்த காரணத்திற்காகவும் முட்டுக்கட்டை நிலை ஏற்படாமலிருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவங்களிற்கான நீதி மிக நீண்டகாலமாகவே வழங்கப்படாமலுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த இந்த இடமாற்றமானது நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கே இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. நிஷாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.