நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலருக்கு விளக்கமளித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், 14க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் ராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது தற்போதைய நிலைமை குறித்து முழுமையாக விளக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி நாடாளுமன்றின் ஊடாக தீர்த்துக் கொள்ளப்படவேண்டும். இந்த நிலைமை நீடிக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திரிகளுடன், ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரேப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் இராஜதந்திரிகளும் பங்கேற்றிருந்தனர். குறித்த ராஜதந்திரிகள் ஏலவே ஜனாதிபதியையும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.