பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில இன்று முற்பகல் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

அதன் பின்பு, ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்தார். பின்னர் பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நிறைவில் பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டன. அதனை தொடரந்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.