உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் அறிந்துகொள்ளாது கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஊடக சந்திப்புகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடயத்துடன் தொடர்புபட்ட கருத்துக்களைக் கூறும்போது பொறுப்புடனும் தகவல்களை நன்கு அறிந்தும் தெரிவிக்க வேண்டும் எனவும் தகவல்கள் தெரியாவிட்டால் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.