கொழும்பு கொட்டாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாவ – ருக்மல்கம வீதியில் அதிவேக வீதியின் மேம்பாலத்திற்கு கீழ், நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் இருவர், அப்பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது, சந்தேகநபர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.