ந.லெப்ரின்ராஜ்

ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரணில் விக்கிரமசிங்கவையோ மகிந்த ராஜபக்சவையோ நாங்கள் நம்பவில்லை. இவ்விருவரும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று நாங்கள் நம்பவில்லை அத்துடன் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நாசகார செயலை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டிருப்போமேயானால் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி : நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைய விருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு சுமுகமான நிலைமை உருவாகவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?பதில் : நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை நாட்டுக்கு மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியிருப்பதுடன், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சவாலாகும். பலாத்காரமாக ஒரு அரசாங்கத்தை தூக்கி எறிந்தது போன்றதொரு நிலைப்பாடுதான் தென்படுகின்றது. யார் ஆழப்போகிறார்? யார் பிரதமராகப் போகிறார் என்பதை விட யாராக இருந்தாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அசாதாரண நிலைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அது நடக்குமா? என்ற நிலைமை தொடர்ந்தும் கேள்வியாகவே இருந்துவருவது கவலைக்குரிய விடயமாகும்.

கேள்வி: மைத்திரி மகிந்த தரப்பும் ரணில் விக்கிரமசிங்க தரப்பும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்திவரும் நிலையில், அரசாங்கத்தை அமைக்கவுள்ள தரப்புக்கு கூட்டமைப்பு முன்வைக்க இருக்கின்ற நிபந்தனை என்ன?

பதில் : ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு, புதிய தொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால், அல்லது அரசியலமைப்பை மீறும் செயல்களை பார்த்துக் கொண்டிருப்போமேயானால் இந்த நாசகார செயலுக்கு நாங்களும் துணைபோனவர்களாக மாத்திரமல்லாது, எதிர்வரும் காலங்களில் இன்றைய நிலைமையை விட மிகமோசமான நிலைமைகள் உருவாவதற்கு வழிவகுத்துக் கொடுப்பதற்கு நாங்களும் துணைபோனவர்களாக ஆகிவிடுவோம்.

எனவே தான் முதற்கட்டமாக இந்த அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை எதிர்த்து வருகின்றோம்; எதிர்த்து வாக்களித்திருக்கிறோம்.

அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏன் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வியை பலர் எங்களிடம் கேட்கிறார்கள் (சிரிக்கிறார்). அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய தேவை ஏன் இருக்கிறது என்றால், தற்பொழுது நடைமுறையில் இருக்கின்ற அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு பாதகமாக இருந்தாலும் அரசு என்ற விடயத்தில் பார்த்தால் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டே அந்த அரசு இருப்பதுடன், சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிறிதளவிலாவது பாதுகாப்பு இருக்கிறது.

இந்நிலையில், அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டிய அரசு அரசியலமைப்பை மீறுவதற்கு நாங்கள் அனுமதிப்போமேயானால் இன்று சிறுபான்மையினர் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை விட மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமைகள் எதிர்காலத்தில் உருவாகலாம். அதன் காரணமாகத்தான் நாங்கள் இந்த அரசியலமைப்பு மீறலை எதிர்த்து வருகின்றோம்.

நாங்கள் (கூட்டமைப்பு) ரணில் விக்கிரமசிங்கவையோ, மகிந்த ராஜபக்ஷவையோ நம்பவில்லை. இவ்விருவரும் தமிழ்மக்களுக்கு நல்லதை செய்வார்கள் என்றும் நம்பவில்லை. இருந்தாலும் புதிய அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்தில்; அவ்வேளையில் அந்தச் சந்தர்ப்பத்தை எவ்வாறு கையாளலாம் என்பதை நாங்கள் பேசி முடிவெடுப்போம்.

நிச்சயமாக எங்களுக்கு அவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைக்குமாகவிருந்தால் தமிழ் மக்களுடைய மிக முக்கியமான தேவையான அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாகவும் காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணி பிரச்சினை போன்ற தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளை ஒரு கால அட்டவணைக்குள் செய்யக் கூடியவாறு நிபந்தனைகளை நாங்கள் விதிப்போம்.

கேள்வி: இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவியிருக்கும் தருணத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான பல விடயங்கள் நடந்தேறும் என்று கூட்டமைப்பின் தலைமை தமிழ்மக்களுக்கு நம்பிக்கை வாக்குறுதியை பல தடவைகள் வழங்கியிருந்தது. இந்நிலையில் தமிழ்மக்களுக்கு வழங்கிய அந்த நம்பிக்கை வாக்குறுதிகள் எதுவும் பெரியளவில் நடைபெறாத சூழ்நிலையில், மூன்றரை வருடங்களில் தேசிய அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் நம்பியிருந்த தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இங்கு ஒரு விடயத்தை அடிப்படையாக நோக்க வேண்டும். அதாவது தமிழ்மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமல்ல, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை நேரில் நின்று நடத்திய சரத் பொன்சேகாவுக்கு கூட பெருந்தொகையான வாக்குகளை அளித்திருந்தார்கள்.

சரத் பொன்சேகா தமிழர்களுக்கு எந்தவொரு நல்ல விடயத்தையும் செய்திருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் தமிழர்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தார்கள். அதேபோல் மைத்திரிபால சிறிசேனவும் எதையாவது செய்வார் என்று நம்பி தமிழ் மக்கள் அந்த நேரத்தில் வாக்களித்திருக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மாத்திரமே மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பு ஆதரிக்க முடிவு எடுத்திருப்பதாக அறிக்கை விடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் 80 வீதத்திற்கும் அதிகமான தபால் மூல தமிழ் வாக்காளர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தங்களுடைய வாக்குகளை அளித்திருந்தார்கள்.

இவர்கள் கூட்டமைப்பு சொன்னதால் மைத்திரிக்கு வாக்களித்திருக்கவில்லை. மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் (கூட்டமைப்பு) அறிக்கை விடுப்பதற்கு முன்னரே தாங்களாக முன்வந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தார்கள். எனவே தமிழ் மக்கள் கூட்டமைப்பு சொன்னதற்காக மாத்திரம் அல்ல, அவர்களாகவே மகிந்த ராஜபக்சக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் நாங்கள் (கூட்டமைப்பு) எடுத்த முடிவின் அடிப்படையில் இன்னும் அதிகமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள்.

அந்த அடிப்படையில், பெருமளவான வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருப்பதால் அவர் நியாயமாக நடப்பார் என்றும் இரு தேசிய கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்திருப்பதால் ஒரு சில நன்மைகள் ஏற்படலாம் என்றும் தமிழ்மக்களும் கூட்டமைப்பின் தலைமையும் நம்பியிருந்தது உண்மை தான். ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் அந்த நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. இதனை பல தடவைகள் நான் கூறியிருக்கிறேன். ஆனால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நம்பியிருந்தார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் நடைபெற்ற சில விடயங்கள் தடைகளின்றி தொடரவேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் (கூட்டமைப்பு) எங்களுடைய முயற்சிகளை கைவிடாது தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். இன்று அவற்றில் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மை தான். எங்களுடைய முயற்சிகளுக்கு மகிந்த ராஜபக்ஷவின் தரப்பு தடையாக இருக்கும் என்று நாங்கள் அன்றே எதிர்பார்த்திருந்தோம்.

எது எப்படியிருந்தாலும் எங்களுடைய கடமைகளில் நாங்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் எங்களுடைய முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்தும் அவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். எங்களுடைய நோக்கத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்தும் பயணித்தோம். இவை எல்லாம் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் முடிந்து விட்டது என்று கூறமுடியாது. விரைவில் அந்தப் பணிகள் தொடரும் என்று நம்புகின்றோம்.

கேள்வி: முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், புதிய கட்சியொன்றை ஆரம்பித்து எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க தயாராகிவருகிறார். அவருடைய இந்த நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழ் மக்கள் இரண்டாக பிளவடையக் கூடிய ஆபத்தை விக்னேஸ்வரனுடைய செயற்பாடு உருவாக்கியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ்க்கட்சிகள் மத்தியிலும் ஒற்றுமை என்பது மிக முக்கியமான விடயமாக பார்க்கப்படும் ஒரு சூழ்நிலையில், விக்னேஸ்வரன் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறார். எவ்வாறிருந்தாலும் இன்று விக்னேஸ்வரன் ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டார். இனி அவர் சகல விடயங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டும். தேர்தல் காலங்கள் வருகின்ற பொழுது தான் விக்னேஸ்வரனுடைய கட்சியும் அவரும் எவ்வாறான வடிவம் எடுக்கப்போகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கமுடியும்.

என்னைப் பொறுத்தவரை விக்னேஸ்வரனுடைய கட்சி தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு பலவீனத்தை உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: சி. வி. விக்னேஸ்வரனை இணைத்தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையுடன் நீங்கள் ஆரம்பம் முதல் நட்புறவை ஏற்படுத்தி வந்திருந்தீர்கள். இந்நிலையில் எதிர்காலத்தில் விக்னேஸ்வரனுடனான உங்களுடைய உறவு எப்படி இருக்கும்?

பதில்: தமிழ் மக்கள் பேரவையை பொறுத்தமட்டில் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் விக்னேஸ்வரன் ஐயா கூறிவருவது, இது ஒரு அரசியல் கட்சியல்ல, இது அழுத்தம் கொடுக்கின்ற ஒரு அமைப்பு. எனவே இந்த அமைப்பில் எவரும் வந்து இணையலாம் என்று கூறியிருந்தார்.

அந்த அடிப்படையில் நாங்கள் தமிழ் மக்கள் பேரவையில் இணைகின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக இந்தப் பேரவை அமைக்கப்பட்டிருக்குமானால் இந்த பேரவையில் நாங்கள் பங்குபற்ற மாட்டோம் என்று தெட்டத்தெளிவாக கூறியிருந்தோம். கூட்டமைப்பை உடைப்பதற்கான அமைப்பாக இந்த பேரவை இருக்கக்கூடாது, மாறாக அழுத்தம் கொடுக்கின்ற சக்தியாக இந்த அமைப்பு இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் ஆரம்பத்தில் கூறியிருந்தோம்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையினுடைய பல செயற்பாடுகளில் நாங்கள் பங்குபற்றியிருக்கின்றோம். எழுக தமிழ் நிகழ்விலும் நாங்கள் பங்குபற்றியதுடன், தீவிரமாக அதற்காக நாங்களும் உழைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் பேரவையில் நாங்கள் தொடர்ந்தும் அங்கத்துவம் வகிப்போம். அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்றைய சூழ்நிலையில் பலவீனப்படுத்தக் கூடாது என்பது தான் என்னுடைய சொந்த நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு அடுத்த கட்ட நிகழ்வுகளை எடுக்க வேண்டும். அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம். (நன்றி யாழ். தினக்குரல் -25.11.2018)