மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, வட்டகச்சி பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். வட்டகச்சி, கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியும் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான இராசநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வவுணதீவு பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்றுகாலை முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேவேளை மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிஸார் இடையூறு செய்தமையால் அதற்கு பழிவாங்குவதற்காக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.