யோ.தர்மராஜ்-
பாராளுமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை யார் பெரும்பான்மையை நிரூபிக்கின்றார்களோ அவர்களே ஆட்சியமைக்க தான் அனுமதி வழங்குவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தையை நடத்தி தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு துரிதமாக தீர்வு காண்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடத்திய சந்திப்பின்போது இணக்கம் தெரிவித்திருந்தார். இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிகும் கட்சிகளின் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பை மேற்கொண்டார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று இரவு நடத்திய சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அங்கு இலத்திரனியல் முறைப்படி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தி, அதில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கிறார்களோ அவர்களை ஆட்சியமைக்க அழைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழ் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை அடுத்த 2,3 நாட்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டவிடும் என எதிர்பார்ப்பதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். (நன்றி தினக்குரல் 01.12.2018)