ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 4மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பினரால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் உள்ள சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது. இதனையடுத்து இது சட்டரீதியாக பார்க்கப்பட வேண்டிய விடயமல்ல. இது ஒரு அரசியல் விடயமே. இதை நாம் நீண்ட காலமாகவே கூறிவருகின்றோம்.இப்போதும் கூறுகின்றோம். இதனை சட்டரீதியாக பார்க்க வேண்டாம். நீங்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இப்போது ஒன்றும் செய்ய இயலாத நிலைமையிருக்கின்றது.

இன்று அரசாங்கமே இல்லாததொரு சூழ்நிலைதான் காணப்படுகின்றது. நான் மாத்திரமே அரசாங்கமாக இருக்கின்றேன். முதலில் இந்தப் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவருவோம். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.