பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனுமீதான வழக்கு மீண்டும் டிசம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்வரும் 12ம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.