கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஹெரோய்ன் கொக்கெய்ன், மோபின், அபின் ஆகிய போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 96 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று பொலிஸ் போதை பிரிவு அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் குறித்த மரணத்தண்டனை கைதிகளுள் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். மேலும் 275 பேருக்கு ஆயுட்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 34 பெண்கள் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த வருடத்தின் ஒக்டோபர் 22ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை 248 கிலோகிராம் ஹெரோய்னும் 6702 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை 430 கிலோ 500 கிராம் ஹெரோய்னும் 30304 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்களெனவும் இந்த வருடத்தில் மாத்திரம் கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் மொத்த பெறுமதி 5166 மில்லியன் ரூபாய்க்கு அதிகம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.