இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமையினை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய ராஜாங்க அமைச்சர் மாக் ஃபீல்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளை தொடர்ச்சியாக சந்தித்து இது குறித்து பிரித்தானியாவின் கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எப்படியிருப்பினும், அடுத்தவருடம் தாம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக மாக் ஃபீல்ட் கூறியுள்ளார். கடந்த ஒக்டோபரில் தாம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளை, இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பாக உறுதி மொழிகளை முற்றாக அமுல்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என தமது இலங்கை விஜயத்தின் போது கோரவுள்ளதாகவும் மாக் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.