ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் ஆகியவர்களினால் குறித்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. குறித்த மனுக்கள் இன்று புவனெக அலுவிகார, சிசிர த ஆப்ரூ மற்றும் முர்த்து பெர்ணான்டோ ஆகியோர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது அரச தரப்பு சட்டத்தரணி, குறித்த மனுக்கள் தொடர்பில் அறிவுரைகளை பெற்று கருத்துக்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் தருமாறு நீதிமன்றத்தில் வேண்டிக்கொண்டார். அதனடிப்படையில் குறித்த மனுக்களை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைனக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுவில் பிரதிவாதிகளாக ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படைய உரிமையை மீறி இருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.