சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது. மூதூரிலுள்ள சம்பூர் கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஜனநாயக மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் அனைத்தையும் உடனடியாக பொது மக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும். மக்களுடைய காணிகளுக்கான ஆவணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இழுத்தடிப்புக்களை நிறுத்தி துரிதமாக காணி ஆவணங்களை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்களால் கோரப்பட்டது. வன பரிபாலன திணைக்களம் தமது காணிகளுக்குள் எல்லைக்கல் போட்டு தமது காணிகளில் விவசாயம் செய்யவும் தடைசெய்து வருவதாகவும் அதனை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினர். காணி உறுதி வழங்குவதற்கான காணிக்கச்சேரி 5 ஆண்டுகளாக நடாத்தபட்ட போதும் உறுதிகளை வழங்குவதில் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதய அரசாங்கம் காணி விடுவிப்புகள் தொடர்பில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டள்ளது.என அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும் தொடர்ந்து காணி விடுப்பு கோரி பொது மக்களின் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளது. எனவே 90 வீதமான காணி விடவிக்கப்பட்டமைக்கான ஆதாரம் இல்லாமல் உள்ளது.எனவும் தெரிவித்தனர்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளான இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது.மற்றும் காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பான விடயம் தொடரபான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.இது தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.