ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு 09.12.2018 அன்று புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அரசியல் மாற்றத்தினால் உருவான பிரச்சினைகள், பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் கட்சியிலிருந்து விலகிச் சென்றமை, கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் விளக்கிக் கூறிய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் எமது கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்தது கட்சிக்கோ தலைமைக்கோ தெரியாது. அவர் கனடாவில் இருந்தபோது பல தடவைகள் தொடர்புகொண்டு கதைத்தபோதும் அப்படியொரு நிலைப்பாட்டினை எடுப்பார் என்பதை நம்பவில்லை. அவர் எமது கட்சியின் கருத்துக்களுக்கு மாறாக ஒரு தன்னிச்சையான முடிவை எடுத்திருக்கின்றார். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவரைக் கட்சியில் இருந்து விலத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடியைப் பொறுத்தமட்டில் நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகுதான் அது குறித்த நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தார்கள். இதற்கு பதில் வழங்கிய த.சித்தார்த்தன் அவர்கள், அரசியல் நிலைமைகளைத் தெளிவுபடுத்தி அங்கத்தவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை வழங்கினார். Read more