வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்ளிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹீன் தெரிவித்தார்.

அதேபோல், மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் காங்சேன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அசாதாரண வானிலை காரணமாக, வடமாகாணத்தில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார். 35 இடைத்தங்கள் முகாம்களில் 10 ஆயிரத்து 342 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 வீடுகள் முழுமையாகவும், 227 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 25 ரூபா வீதம் நட்டயீடு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரணைமடு, ராஜாங்கனை, தெதுருஓய ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையில் உள்ளன.

இது தொடர்பில் தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் கூட்டம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வெள்ளம் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்கான நட்டஈடுகள் வழங்கப்படும். அதற்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்படும். இந்த உதவிகள் அனைத்தும் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.