இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும், நிலைபேறான அபிவிருத்தியுடைய உலகினை உருவாக்குவதற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷா அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மல்லிமாராட்சி தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை ஜனாதிபதி விருந்தினர் இல்லத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துக்களை தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோஷா மற்றும் தென்னாபிரிக்க மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா என்பன இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நல்லுறவின் 25வது வருட நிறைவைக் கொண்டாடவுள்ளமையை நினைவுறுத்தினார். அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு நல்லுறவு என்பவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் மல்லிமாராட்சி குறிப்பிட்டார்.