கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரையான குறுந்தூர ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு, ஜப்பான் அரசாங்கம் கடனுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்கீழ், 1,850 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்தக் குறுந்தூர ரயில் மார்க்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பு – கோட்டை முதல் மாலபே வரை 16 ரயில் நிலையங்கள் அடங்கலாக 17 கிலோமீற்றர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ள இந்த ரயில் மார்க்கத்திற்கு, நிதி மற்றும் தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கு ஜப்பானின் நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக இந்தப் புதிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.