சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவொன்றுக்குள் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்களை அங்கிருந்து நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டுக்குரிய ரீ யூனியன் என்ற தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற குறித்த மீனவர்கள் ஏழு பேரும் கடந்த வாரம் அந்நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி’ ஒஸத புத்தா’ என்ற மீனவப் படகு மூலம் குறித்த மீனவர்கள் பிரான்ஸ் நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் சட்டவிரோதமாக அந்நாட்டுக்குள் நுழைந்துள்ளதால் அவர்களை அங்கிருந்து நாடு கடத்த பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை அவ்வாறு நாடு கடத்தப்பட்ட மீனவர்களுள் ஒருவர் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளாரெனவும் இருவர் இன்றைய தினம் நாட்டுக்கு வருவார்களெனவும் இலங்கை மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.