வவுனியா, புதூர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் சந்தேகத்தில் நபரொருவரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். தாம் அவரைத் துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அன்று இரவிலிருந்து அடுத்த நாள் மதியம் வரை இராணுவம் பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டு தேடுதல் நடத்திய போதும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் குறித்த பொதியை பொலிஸார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வவுனியா சாளம்பைக்குளத்தினை சேர்ந்த நெய்முத்துராசா சுதாகரன் (குணா) என்பவரை கடந்த 04.01.2019 அன்று சந்தேகத்தில் கைது செய்து நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய சமயத்தில் நாளைவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.