மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாண ஆளுனராக ரஜித் கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனராக டொக்டர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் சுரேன் ராகவன், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராக இருந்துள்ளார். சிறந்த கல்விமானும், எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளரும், ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றவரும்,

2005ம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் முதுமானி பட்டம் பெற்று, 2008ம் ஆண்டு கலாநிதி பட்டத்தை முடித்தவரும், 2008-2011களில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்றவரும், தற்போது வரையில் ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக செயற்பட்டு வந்தவருமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.