மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தை பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஈற்றன் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவர் நேற்று இரவு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின் குறித்த நோயாளர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த அம்பியூலன்ஸ் வண்டி மீண்டும் பேசாலை பிரதேச வைத்தியசாலை நோக்கி வந்துள்ளது. அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் குறித்த அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்துள்ளனர்.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை வீதியூடாக பேசாலை பிரதேச வைத்தியசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது எருக்கலம் பிட்டி பகுதியில் இருந்து மன்னார் நோக்கி வந்த முச்சக்கர வண்டியில் பல்வேறு மின் குமிழ்களை ஒளிர்ந்த நிலையில் வேகமாக பயணித்ததால் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி எதிரே வருவது என்ன வாகனம் என அறிந்து கொள்ள மின் குமிழை ஒளிரச்செய்து வேகமாக வைத்தியசாலை நோக்கி வந்துள்ளார்.

இதன்போது அம்பியூலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்து குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்த நிலையில் பேசாலை பொது மயானத்திற்கு முன் அம்பியூலன்ஸ் வண்டியை இடை மறித்து சாரதியை தாக்க முயன்றுள்ளனர். எனினும் சாரதியும், சக பணியாளர்களும் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டியை பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் பேசாலை வைத்தியசாலையின் வாசலில் அம்பியூலன்ஸ் வண்டியை இடை மறித்த குறித்த நபர்கள் அம்புலன்ஸ் வண்டி சாரதியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அம்பியூலன்ஸ் வண்டியின் கண்ணாடியும் குறித்த நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக வைத்தியசாலை நிர்வாகம் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நிலையில் பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, அம்புலன்ஸ் வண்டியின் சாரதியை தாக்கி குறித்த மூன்று நபர்களையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் குறித்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமை மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமையினை கண்டித்தும், குறித்த நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.