யாழ்ப்பாணம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா நிகழ்வுகள் தைப்பொங்கல் தினமான இன்று (15.01.2019) இளவாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பொம்மலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவற்றோடு சறுக்குமரமேறுதல், கயிறிழுத்தல் மற்றும் சிறுவர்கள்கள், பெண்களுக்கான கிராமிய விளையாட்டுக்கள் பலவும் இடம்பெற்றிருந்தன. மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்வி மேம்பாடு, கிராம அபிவிருத்தி, சிரமதானங்கள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல் உட்பட பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் முன்மாதிரியான செயற்பாடுகள் கிராம மக்களால் மட்டுமன்றி குடாநாட்டு மக்கள் அனைவரினதும் பாராட்டுதல்களுக்கும் கவனத்திற்குமுரியது என்பது குறிப்பிடத்தக்கது.