குரும்பசிட்டி கிராமத்தில் வாழும் மக்களினதும் குரும்பசிட்டியிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரதிநிதிகளினதும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று தைப்பொங்கல் தினத்தில்(15-01-2019) குரும்பசிட்டியிலுள்ள ஆ.சி. நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றபோது புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டார்.

புலம்பெயர்ந்து வாழும் குரும்பசிட்டி மக்களின் தாராள நிதியுதவியுடனும் தற்போது குரும்பசிட்டியில் வாழும் மக்களின் உழைப்புடனும் குரும்பசிட்டி கிராமம் மீண்டும் மிடுக்குடன் தலைநிமிர்வதாக பெருமிதம் கொண்ட கிராம மக்கள் மேலும் கல்வி, உட்கட்டுமானம் என்பவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தியபோது,சிறந்த திட்டங்களை முன்வைத்து வீண்விரயங்களை தவிர்த்து அர்ப்பணிப்புடன் செயற்படும்போது புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்குமென புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகள் உறுதியளித்ததோடு கிராம மக்களின் நேர்மையான அர்ப்பணிப்புடன்கூடிய கூட்டுமுயற்சிகளையிட்டு மனம்மகிழ்ந்தனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், புலத்தில் வாழும் மக்களினதும் புலம்பெயர்ந்து வாழும் மக்களினதும் இந்த ஒன்றுகூடல் கிராமத்தின் அபிவிருத்திக்கு காத்திரமான பங்களிப்பை வழங்குவதாகவும் உறவுகளை மீண்டும் ஒன்றுசேர்க்கும் நெகிழ்ச்சி மிகுந்த தருணமாகவும் அமைந்திருப்பதுடன் வாழ்வின்மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதாகவும் தெரிவித்தார்.