(எஸ்.நிதர்ஷன்)
 
சமகால அரசியல் நிலைமைகள் அதிலும் அரசமைப்பு உருவாக்க பணிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள இல்லத்தில் (04.01.2019) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
 
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அங்கு அவர் தெரிவித்தவை வருமாறு, அரசியல் தீர்வு சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன.

நாடாளுமன்றம் பேரவையாக மாற்றப்பட்ட நடவடிக்கைகள் குழு அதற்கு கீழ் உபகுழுக்கள் என்று இப்படியாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தாலும் கடந்த நவெம்பர் மாதம் இரண்டாவது அறிக்கை வெளி வருவதாக இருந்தது.

ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த நடவடிக்கைகள் எல்லாம் பிற்போடப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலைமையில் என்னைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய அரசியல் தீர்வை எடுக்க முடியுமென்று நான் நம்பவில்லை.
 
அது இந்த அரசாலும் தீர்க்க முடியாது. அது மிகவும் கஷ்டமான வேலை. அதற்காக அந்த முயற்சி களை கைவிடவும் முடியாது. தொடர்ந்தும் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சிகளை எடுக்க வேண்டும்.
 
சர்வதேச ரீதியில் கூட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லமாட்டார்கள். ஆனால் எங்களுடைய தமிழ்த் தரப்புக்கள் பலமாக இருக்கின்ற காலங்களிலே அது சம்மந்தமாக தீவிரமாகக் கதைப்பார்கள். ஆனால் நாங்கள் பலவீனமாக இருக்கின்றபோது அதுவும் பலவீனமாகவே முயற்சி தொடரும்.
 
இருந்தாலும் எங்களுடைய முயற்சி களை நாங்கள் கைவிட்டு விட முடியாது. இது ஒன்றுமே சரிவராது என்ற அபிப்பிராயம் பலர் மத்தியில் இருந்தாலும் சரிவராது என்று சொல்லி நாங்கள் கைவிட்டுவிட முடியாது. நாங்கள் எங்களுடைய முயற்சிகளைத் தொடர வேண்டும். அவ்வாறு முயற்சிகளைத் தொடருவதன் மூலம் தான் சில விசயங்களை நாங்கள் அடைய முடியுமென்று நான் நம்புகின்றேன்.
 
அதன் காரணமாகத் தான் நாங்கள் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றோம். ஆனால் இன்றிருக்கின்ற நிலைமையிலே நாடாளுமன்றில் நூற்றியைம்பது வாக்குகளை எடுப்பது மிகவும் கஷ்டம். அது மாத்திரம் அல்லாமல் மிகவும் குழப்பகரமானதொரு சூழ்நிலைமை இருக்கின்றது.
 
ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கக் கூடிய முறுகல் நிலை. இவைகள் எல்லாம் தீர்வை நோக்கிய எங்கள் பயணத்தை மிகமிக தடைப்படுத்திக் கொண்டு இருக்குமென்று நான் நினைக் கின்றேன்.
 
கேள்வி அரசமைப்பு தீர்வு திட்டம் எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது.
 
பதில் ஒற்றையாட்சி, ஏக்கிய ராஜ்ஜிய, ஒருமித்த நாடு என்று முன்னர் கூறப்பட்ட நிலைமைக்கும் இன்றிருக்கின்ற நிலைமைக்கும் இடையே வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது இன்றிருக்கின்ற நிலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற பலர் ஏக்கிய ராஜ் ஜிய என்ற பதம் மூன்று மொழிகளிலும் வர வேண்டுமென்று கூறுகின்றனர்.
 
அது மாத்திரமல்ல அவர்களுடைய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியே அப்படியானதொரு முடிவை எடுத்திருப் பதாகவும் மிக மிக கடும்போக்காகவே அவர்கள் பார்ப்பதாகவும் ஊடகங்களி னூடாக அறிந்து கொண்டிருக்கின்றேன். அப்படியான நிலைமைகளைப் பார்க் கின்றபோது நிச்சமாக தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான அல்லது தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக் கூடியதான அரசியல் தீர்வு வருமென்று நான் நம்பவில்லை.
 
கேள்வி அவ்வாறாயின் ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற பதங்களில் இணக் கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு சகல தரப்புக்களும் இணங்கியிருந்ததாக கூறப்படுகிறதே?
 
பதில் உண்மையில் அது சம்பந்தமாகப் பேசப்பட்டிருக்கின்றது. எங்களுக்குள்ளேயே இருக்கக் கூடிய ஒரு சிலர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
 
ஒரு சிலர் ஏற்காமல் இருந்திருக்கலாம். இது வந்து இடை நடுவிலே இருக்கின்ற விடயத்தை ஏற்றுக் கொண்டார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. அதற்குச் சாதகமாக சிலர் எங்கள் கட்சியில் இருந்தும் பேச முடியும். அதேநேரம் அதற்குப் பாதகமாகவும் சிலர் பேச முடியும்.
இது எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் நாடாளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்திலே வாக்களிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்தால் தான் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டவர்களாகக் கருத முடியும்.
 
அதுவரை ஒரு பேச்சுவார்த்தை மட்டத்திலே தான் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இன்னும் முழுமை பெறவில்லைத்தானே!
 
நடவடிக்கை குழுவால் வரைவு நாடாளுமன்றத்திலே வைக்கப்பட்டு நாடாளுமன்றத்திலே விவாதிக்கப்பட்டு அதிலே மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அதன் பிறகு வாக்களிக்கப்பட்டு 3 இல் 2 பெரும்பான்மை பெற்று மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு மக்களும் அதற்கு வாக்களித்த பின்னர் தான் அது நிறைவு பெறும். நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது கட்சி என்ற ரீதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கு வாக்களிக்கின்றாரா இல்லையா அல்லது அதனை ஏற்றுக் கொள்கின்றாரா இல்லையா என்று வாக்களிக்கின்றபோது தான் உண்மை தெரியவரும.
 
இதனை கடந்த 70 வருடங்களாக பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே அப்படியானதொரு நிலைதான் இன்றும் இருக்கின்றது. ஆகையினால் இருக்கின்ற நிலைமைகளைப் பார்க்கையில் இதுவொரு முடிவை எட்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.
 
கேள்வி ஒற்றையாட்சியா, ஒருமித்த நாடா என்ற சொல் பதத்திலே குழப்பம் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில் இந்த வரைபு தயாரிக்கின்ற போது வடக்கு கிழக்கு இணைப்பு, பௌத்தத்துக்கு முன்னுரிமை, ஆகியவற்றுடன் ஒற்றை யாட்சிக்கும் கூட்டமைப்பு இணங்கியதா?
 
பதில் என்னுடைய பார்வையிலே என் னுடைய அறிவிற்கு எட்டிய வகையில் கூட்டமைப்பு கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்து இதற்கான இணக்கம் எதனையும் இதுவரை பெறவில்லை. ஆனால் சில வேளைகளில் நடவடிக்கைக் குழுவில் இது சம்பந்தமாக விவா திக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு விவாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு விசயத்தை நாங்கள் கவனிக்க வேண்டும்.
 
அதாவது இடைக்கால அறிக்கை வருகின்ற போது கூட்டமைப்பின் சார்பிலே நடவடிக்கைக் குழுவில் இருக்கின்ற சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ஒரு இணைப்பைக் கொடுத்திருக்கின்றார்கள். அந்த இணைப்பிலே மிகத் தெளிவாக தமிழ் மக்களுடைய அபிலரை௸க ளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்திலே சமஷ்டி. வடக்கு கிழக்குஇணைப்பு பற்றியெல்லாம் பேசப்பட்டுள்ளது. ஆகவே நடவடிக்கை குழு அறிக்கையானது நிச்சயமாக பூரணத்துவமானதும் அல்ல. இது எல்லோருக்கும் தெரியும்.
 
ஏனெனில் நாங்கள் இரண்டாவது அறிக்கையை முழுமையாகப் பார்க்க வில்லைத்தானே. ஆகவே அதனை சகலரும் பார்த்த பின்னர் விவாதித்து அதற்கு பிறகு நாங்கள் கட்சியாக கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கிறது என்பது தான் முக்கியம். அது வரட்டும். ஆக கூட்டமைப்பின் அவர்கள் இருவரும் அதற்கெல்லாம் ஒத்துக் கொண்டு விட்டார்கள் எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு ஒத்துக் கொண்டிருந்தால் அந்த இணைப்பைப் போட்டிருக்கத் தேவையில்லை. ஆகவே நாங்கள் எதனையும் ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தமல்ல. அதனை கட்சி தான் பேசி முடிவெடுக்க வேண்டும்.
 
கேள்வி கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் இணைப்பில் போடப்பட் டுள்ளது என்றால் அதற்கு கூட்டமைப்பு இணங்கித் தான் இணைப்பு மட்டும் போடப்பட் டுள்ளதா…?
 
பதில் இல்லை. என்னுடைய அறிவைப் பொறுத்தமட்டில் கூட்டமைப்பு கட்சியாகக் கூடி ஒரு முடிவை எடுக்கவில்லை. ஆனாலும் நடவடிக்கைக் குழுவில் இருக்கின்ற எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது. அது சம்பந்தமாகப் பேசப்படுகிறது. ஆனாலும் அவர்கள் முழுமையாக இவற்றுக்கெல்லாம் ஒத்துக் கொண்டிருந்தால் இணைப்புக் கொடுத்திருக்கத் தேவையில்லையே. சிலவேளை விவா திப்போம் என்ற அடிப்படையில் இணைப்பைக் கொடுத்து ஏற்றுக் கொண்டார்களா என்றும் தெரியவில்லை. அதாவது அது குறித்து விசாரித்து அதனைக் கூட்டலாம் குறைக்கலாம் என்ற அடிப்படை ஏதும் இருக்கவும் கூடும்.
 
கேள்வி ஓற்றையாட்சி யின் அடிப்படையில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலையே தீர்வு அமையுமென தெற்கிலுள்ளவர்கள் கூறுகின்றபோது அவ்வாறான தீர்வு வந்தால் உங்கள் கருத்து என்ன? கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக அமையும்.
 
பதில் தனிப்பட்ட முறையில் என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அது சம்பந்தமாகப் பேசவேண்டும். அவ்வாறு பேசி சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும். ஓரளவிற்கு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வாக இருக்கும் என்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம். ஆகவே மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வே எமக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.
ஏனென்றால் இருக்கின்ற இந்த நிலையில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்போம் பேசிக் கொண்டிருப்போம் என்று கூறி கடந்த எழுபது வருடங்களாக நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் போன்று இனியும் நாங்கள் பேசிக் கொண்டிருக்க முடியாது.
 
அப்படி காலத்தை இழுத்தடிப்பது இனத்திற்கும் நல்லதல்ல. இதை இப்படியே பேசிப்பேசி கொண்டிருக்க முடியாது. ஆனால் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதையே சிங்களத் தலை மைகள் சிலவேளை விரும்பலாம்.
 
ஏனென்றால் கடந்த 70 வருடங்களுக்கு முன்பு இருந்தே பேசிக் கொண்டு வருகின்றோம். அவ்வாறு நாங்கள் பேசத் தொடங்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமிடையே எவ்வளவோ நாங்கள் பலவீனமாகி விட்டோம். குறிப்பாக ஆயதப் போராட்ட காலத்திற்கும் இப்போது இருக்கின்ற காலத்திற்கும் இடையிலே கூட நாங்கள் மிகவும் பலவீனமாகவே உள்ளோம்.
 
ஆகவே இந்த நிலைமையை தொடர தொடர்ந்தும் விட்டுக் கொண்டிருப்போமேயானால் இன்னும் பலவீனமாகவே நாம் இருப்போம். ஆகவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு நியாயமான தீர்வு வேண்டும். அதாவது எங்களுடைய பகுதிகளிலே நாங்களே எங்கள் அலுவல்களைப் பார்க்கக் கூடியதாக கொடுத்த அதிகாரங்களை மீளப் பறிக்க முடியாதவாறான நிலையில் ஒரு தீர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படியான தொரு தீர்வுவருமா என்பது கேள்விக்குறி தான்.
 
ஏனென்றால் 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து மாகாண சபை முறைமையை எல்லாம் எதிர்த்தோம். இன்று நாங்கள் அதற்காக எங்களுக்குள்ளேயே அதன் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார் என்று போட்டி போடுகின்றோம்.
 
ஆகவே பலர் சொல்வதுபோன்று அன்றே அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டு இன்னும் பலப்படுத்தியிருக்கலாம். அதனை ராஜீவ் காந்தி இருந்த காலத்தில் செய்திருக்கலாம்.
ஆனால் அந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்காமல் விட்டு அதனால் வந்த பின்விளைவுகள் மோசமானவை. இன்று இந்தியாவும் எமது பிரச்சினையில் மிகப் பெரிய அளவில் அக்கறை செலுத்தவில்லை. ஆகவே சில வேளைகளில் சில விடயங்களில் நாங்கள் ஆராய்ந்து முடிவுகளை எடுக்காமல் உணர்வுபூர்வமாக முடிவுகளை எடுப்போமானால் இன்னும் பின்தள்ளிப் போகும் நிலைமை வரும்.
 
கேள்வி அரசமைப்பு உருவாக்கத்தில் ஒற்றையாட்சியா ஒருமித்த நாடா என்பது தொடர்பில் அதன் உருவாக்க காலத்திலும் அதற்குப் பின்னர் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்ட காலத்திலும் எதுவும் பேசாமல் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்த நிலையில் அக் கட்சியினர் தற்போது ஒற்றையாட்சியின் அடிப்படையிலே தீர்வு ஒருமித்த நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வருவதை கூட்டமைப்பு எவ்வாறு பார்க்கின்றது?
 
பதில் எது எப்படி இருந்தாலும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டே ஆதரவு வழங்கப்பட்டது. தீர்வு முயற்சி மற்றும் கைதிகள் விடுதலை குறித்தும் சொல்லப்பட் டது. இவ்வாறு பல விடயங்கள் சொல்லப்பட்டபோது அதற்கு அவர்கள் எழுத்திலே உறுதிமொழி தருகிறோம் எனக் கூறினர். ஆனால் அது பெற்றப்பட்டதா இல்லையா என்பது தெரியாது. ஆகவே நாங்கள் எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாகக் கூறியே இந்த ஆதரவை வழங்கியிருந்தோம்.
 
ஆனாலும் மஹிந்த ராஐபக்௸ மீண்டும் அதிகாரத்திற்கு வர எமது மக்கள் விரும்பவில்லை என்பதாலும் ரணிலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியும் இருந்தது. ஏனெனில் நாம் நடு நிலை வகித்தால் கூட மஹிந்த வந்துவிடுவார் என்ற நிலையே காணப்பட்டது. இதனை எமது மக்கள் பல தடவைகள் சொல்லியும் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர்.
 
கடந்த முறை ஐனாதிபதித் தேர்தலிலும் இம்முறை ஐனாதிபதித் தேர்தலிலும் எமது மக்கள் மஹிந்தவிற்கு எதிராகவே அதிகளவிலான வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். அதே போன்று இந்த நெருக்கடி நிலையிலும் மக்கள் அதனையே எம்மிடம் வெளிப்படுத்தியிருந்தனர். அதற்கமையவே கூட்டமைப்பின் செயற்பாடுகளும் அமைந்திருந்தன.
 
கேள்வி இவ்வாறான நிலைமையிலும் திடீரென ஒருமித்த நாடு இல்லை. ஒற்றையாட்சி அடிப்படையில் தான் தீர்வு என்று பிரதமரும் அவரது கட்சியினரும் சொல்லுகின்றனர். அதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
 
பதில் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நிலைப்பாடு தொடர்பில் முதலாவதாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அடுத்ததாக அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களுடையதும் தங்கள் கட்சியினுடைய நலன்களைப் பொறுத்து தான் செயற்படுவார்கள்
 
பொதுவாக சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் தங்களுடைய கட்சி தோல்வியடைந்து விடும் என்றே நம்புகின்றனர்.
 
ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்க அப்படியல்லர் என்பதை 1994 ஆம் ஆண்டு தேர்தலில் நிரூபித்துள்ளார். அவர் ஒரு நியாயமான தீர்வின் அடிப் படையில் என்று சொல்லியபோதும் 62 வீதமான சிங்கள மக்கள் வாக்களித்திருந்தார்கள்.
 
இருந்தாலும் சிங்களக் கட்சிகளைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்விற்குச் சென்றால் தங்கள் கட்சி தோற்றுவிடுமென்று அவர்கள் நம்புகின்றார்கள்.
 
அதனடிப்படையில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் இப்படியாகச் செயற்படலாம். ஆனால் அவர்கள் என்ன சொல்லப் போகின்றனர்; உண்மை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்பிடிச் சொல்லியிருந்தால் அதனடிப்படையில் தான் நிச்சயமாகச் சொல்லப்பட்டிருக்கும் என்பதும் உண்மை.
 
கேள்வி ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த கூற்று அல்லது நிலைப்பாட்டிற்குப் பின்னர் கூட்டமைப்பு எத்தகைய நட வடிக்கைகளை அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ளது?
 
பதில் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நிலைப்பாடு தொடர்பில் அவர்களிடம் கேட்க உள்ளோம். அவ்வாறு அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்று பார்க்க வேண்டும். அதனால் சரியாக ஆராய்ந்து பார்த்த பின்னரே தான் எங்கள் முடிவுகள் அமையும்.
 
கேள்வி ஓற்றையாட்சியின் அடிப்படையில் தான் தீர்வு என்றும் அதற்கு கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகவே ஐக்கிய தேசியக் கட்சியினர் சொல்லி வருகின்றனர். அவ்வாறாயின் கூட்டமைப்பு அதற்கு உண்மையில் இணங்கியுள்ளதா. வரப்போகின்ற தீர்வு எதனை அடிப்படையாகக் கொண்டது?
 
பதில் நான் அறிந்தவரையில் ஒருமித்த ஆட்சி என்ற அடிப்படையில் தான் தயாரிக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால் அதில் எந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமோ என்பது எனக்குத் தெரியாது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு மாறாகச் சொல்லுகின்ற நிலையில் இனி அதனடிப்படையில் தான் அவர்கள் கொண்டு வருவார்கள். அதற்கு கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப் பெரும்பான்மையான வர்கள் அல்லது ஏறக்குறைய அனைவருமே அதனை ஏற்றுக் கொள்ளமாட் டார்கள். அதற்கு எதிராகத்தான் இருப்பார்கள்.
 
கேள்வி ஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒருமித்த நாடு என்று சுமந்திரன் கூறியுள்ளார். அதே நேரம் ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி தான் என்று லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இந்த குழப்பமான கருத்துக்கள் வெளிவரும் நிலையில் தீர்வை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளனவா?
 
பதில் என்னைப் பொறுத்தமட்டில் நான் இப்போது ஆரம்பம் முதலே இது மிகவும் கடினமான விசயம் என்று சொல்லிக் கொண்டே வருகின்றேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு வருடத்தில் இந்த அரசு தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அது கொண்டுவரப்படாத இந்த நேரத்தில் இனிக் கொண்டுவருவதும் மிகக் கஷ்டமாகத் தான் இருக்குமென்றும் நான் நம்புகின்றேன்.
 
இந்த ஏக்கிய ராஜ்ஜிய என்ற பதம் ஒருமித்த நாடு என்று சொல்கிறதா அல்லது ஒற்றையாட்சி என்று சொல்லுகிறதா என்பது தெரியவில்லை. எனக்கு சிங்களம் மிகப் பெரிய அளவில் தெரியாது. ஆனாலும் தெரியுமோ தெரியாதோ அரசமைப்பில் எதனைச் சொல்லப் போகின்றர்கள் என்பது மிக முக்கியமான விசயம். ஆதற்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றார்கள் என்பதும் முக்கியமானது.
 
இவைகள் எல்லாம் சொல்லப்பட்டு இன்றிருக்கின்ற சூழ்நிலையிலே நல்லதொரு தீர்வு வருமென்று நான் எதிர்பார்த்தால் என்னுடைய அரசியல் அறிவு பூச்சியமென்றே எதிர்பார்ப்பேன்.
 
ஏனென்றால் தென்னிலங்கையில் இன்று இருக்கக்கூடிய சூழ்நிலை அரசியல் குழப்பங்களால் ஒரு சரியான தீர்வை நோக்கி நாங்கள் பயணிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. என்றார்.