வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

வவனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து கடை வீதி வழியாக ஊர்வலத்தை ஆரம்பித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தளத்தை அடைந்தனர். பின்னர், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு பசார் வீதி வழியாக ஊர்வலமாக வந்த அவர்கள் தமது போராட்ட தளத்தை அடைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ‘எமது பிள்ளைகள் வராது எமக்கு பொங்கல் இல்லை’, ‘ மாறி மாறி வந்த அரசாங்கங்களில் நாம் நம்பிக்கையிழந்து விட்டோம்’, ‘ கூட்டமைப்பும் எம்மைப் பற்றி பேசாது சிங்கள மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பது போன்று செயற்படுகின்றது’,

‘ சுமந்திரன் பௌத்ததிற்கு முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சியான ஏக்கிய ராச்சிய என்பவற்றை ஏற்றுக் கொண்டுள்ளார்’, ‘இனி நாம் அமெரிக்காவையையும், ஐரோப்பிய ஒன்றியத்தையுமே நம்புகின்றோம்’,’ அமெரிக்கா வந்து விரைவாக எமக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்’ என அவர்கள் கோசங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.