வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு இம்மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் முழுமையான விபரங்கள், அவற்றில் மீள்குடியேறிய மக்களின் முழுமையான விபரங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்கள், ஏனைய உதவித்திட்டங்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன், யாழ், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களும், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளரும் இம்மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.