திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், பின்னாளில் டென்மார்க்கில் வசித்து வந்தவருமாகிய திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு ஆழந்த துயரும், வேதனையும் அடைகின்றோம்.

அன்னார், தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவரும் அனைவராலும் மதிக்கப்பட்டவருமான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

மிகத் தீவிர தமிழ்த் தேசியவாதியாகவும், தமிழ்இனப் பற்றாளராகவும் திகழ்ந்த குமாரதுரை அண்ணர் அவரது துணிச்சல் மிக்க செயற்பாடுகளினால் மக்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டவர். விடுதலைப்போராட்ட காலத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்காளானதுடன் மூன்று வருடங்களுக்குமேல் சிறைவாசம் அனுபவித்திருந்தார்.எங்களுடைய தலைவர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களுடனும், எங்கள் இயக்கத்துடனும் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியவர். கழகத்திற்கு ஆரம்பகாலந்தொட்டு பல வழிகளிலும் உதவி வந்தவர். கழகத்திற்கு மாத்திரமல்ல, ஏனைய தமிழ் இயக்கங்களுக்கும் பல்வேறு உதவிகளைப் புரிந்தவர்.

விடுதலைப்பற்றாளனாக, மிகச் சிறந்த சமூகத் தொண்டனாக பல பொதுப்பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த அருணாசலம் குமாரதுரை அவர்களின் இழப்பு தமிழினத்துக்கான இழப்பு.

அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர்கள் உட்பட்ட அனைவருடனும் எமது துயரினை பகிர்ந்துகொண்டு, அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
25.01.2019.