யா.விடத்தற்பளை கமலாசினி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் நாகேந்திரன்; அவர்களின் தலைமையில் இன்று (28.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி உடற்கல்வி, வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ந.ஸ்ரீகாந்தா அவர்களும் கௌரவ விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபை உப-தவிசாளர் மயூரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மாணவர்களுக்கிடையே பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றதைதொடர்ந்து பழைய மாணவர் நிகழ்வு, தலைவர் உரை, விருந்தினர்கள் உரை என்பன இடம்பெற்று மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது 2018ம் ஆண்டுக்கான ஆண்டு-5 புலமைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற கல்வியில் ஆர்வமிக்க வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஐவருக்கு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) சுவிஸ் கிளையின் நிதி உதவியினால், துவிச்சக்கரவண்டிகள் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்குமுகமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப் பெரியார்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் விபரங்கள்: 1. ஜெயரூபன் தேனுசன்(181 புள்ளிகள்) 2. பிரபாகரன் மிதுர்சிகா(176 புள்ளிகள்) 3. சிலம்பரசன் கதிர்நிலா(176 புள்ளிகள்) 4. பத்மலகேந்திரன் கபிசாந்(173 புள்ளிகள்) 5. ஆனந்தராசா ஆர்த்திகா(146 புள்ளிகள்).