சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் பீ.எல்.எல்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த சார்ள்ஸை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ஓய்வுப்பெற்ற கடற்படை அதிகாரியொருவரை நியமிக்க கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அமைச்சரவையின் இந்த யோசனைக்கு கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரை மாற்றவதற்கு எடுத்த முடிவை நீக்குவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் பீ.எல்.எல்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது பதவி நீக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் தொழிற்சங்கங்கள் கடந்த ஒரு வாரமாக முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையால் நாளொன்றுக்கு 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை நாடு இழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.