துபாயில் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷ் உட்பட கைது செய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாகந்துர மதூஷ் கைது செய்யப்பட்ட சமயத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் தனது ஊடக இணைப்புச் செயலாளர் என்று பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளின் போதும் தான் தெரிவித்திருந்த போதும் தனக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அவ்வாறு தான் யாருக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பொய்ப் பிரச்சாரம் காரணமாக தனது 30 வருட காலத்திற்கும் மேற்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தனது கடிதத்தில் கூறியுள்ளார். ஆகவே டுபாயில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் யார் என்பதை கண்டறிவதற்காக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.