ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்காலம் 2019 ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2006 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதியினால், 2018 பெப்ரவரி 14 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எவ்வாறாயினும் 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த ஆணைக்குழுவின் காலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் மீண்டும் அந்தக் காலம் 2019 பெப்ரவரி 15ம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் காலம் மே மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (07) வெளியிடப்பட்டுள்ளது.