காணாமல் போனோருக்கு பதில் கூற வலியுறுத்தி காணாமல் போனோர்களின் உறவுகள் கறுப்பு துணியால் வாயைக் கட்டியும் விளக்கேற்றியும் தமது உறவுகளைத் தேடி அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

சமூக வலைத்தளங்களின் நண்பர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் போது, மக்கள் பிரதிநிதிகளே எமது கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா? இலங்கையின் இறையாண்மையும் எனது மகனும் ஒன்றா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன? இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற போது, ஆளுநரின் அலுவலகத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்த நிலையில், 5 பேர் சென்று ஆளுநரின் மக்கள் தொடர்பு அலுவலகரிடம் ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர். இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மகிந்தராஜபக்ஷ இருவர் மீதும் திருப்தி அற்ற நிலையில் காணாமல் போன உறவுகள், ஆக்ரோசமான வார்த்தைகளால், திட்டி தமது வேதனையையும் வெளிப்படுத்தினார்கள்.